தமிழ்நாடு

சேலம்: தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் கிடந்த பெண்ணின் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை

சேலம்: தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் கிடந்த பெண்ணின் சடலம் - காவல்துறை தீவிர விசாரணை

kaleelrahman

காடையாம்பட்டி அருகே பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலை மீட்ட தீவட்டிப்பட்டி போலீசார், பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள ராமமூர்த்தி நகர் பகுதியில் சென்னை செல்லும் தண்டவாளத்தின் அருகே ஒரு பெண் சடலமாக கிடப்பதாக தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீவட்டிபட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் இருந்து சுமார் 40 மீட்டர் தொலைவில், பெண்ணின் உடல் அலங்கோலமான நிலையில் கிடந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சங்கீதா இறந்தது யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தினார். அப்போது இறந்த கிடந்த பெண்ணின் கையிலும், வயிற்றிலும் காயம் இருந்தது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து சேலத்தில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. உடல் கிடந்த இடத்திலிருந்து மோப்பநாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. பின்னர் தடைய அறிவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து கைரேகை பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த பெண் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி மலர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இவர் எதற்காக, யாரால் கொலை செய்யப்பட்டார். முன்விரோதத்தில் கொலை செய்து முப்புதரில் உடலை வீசி சென்றனரா அல்லது பெண்ணை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனரா போன்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, பிரேத பரிசோதனைக்கு பின்னரே கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசப்பட்டாரா, கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்று தெரிவித்தனர்.