நாகை பேருந்து நிலையத்தில் மது போதையில் பெண் ஒருவர் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்ணின் அருகே அவரது 3 வயது குழந்தை செய்வதறியாது விளையாடிக் கொண்டிருந்த காட்சி பார்ப்போரிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியது.
நாகை பேருந்து நிலையத்தில் பயங்கர மது போதையுடன் ஒரு பெண் மயங்கி கிடந்தார். அவரோடு 3 வயது குழந்தை செய்வதறியாது விளையாடிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் நாகை வெளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெளிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் நடத்திய விசாரணையில் மயங்கி கிடந்த பெண்மணி நாகை மாவட்டம் கீழையூரை சேர்ந்த பரமேஸ்வரி என்பதும், அந்தக் குழந்தையின் தந்தையும் தாயும் சண்டையிட்டு பிரிந்து வாழ்வதும் குழந்தை அவரது பாட்டியான பரமேஸ்வரியிடம் வளர்வதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குழந்தையை காவலர்கள் பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்து சென்றனர். தமிழகத்தில் குழந்தை திருட்டுகள் அதிகம் நடக்கும் சூழலில் போதை மயக்கத்தில் குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு அந்தப் பெண்மணி செய்த செயல் அங்கு இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.