தமிழ்நாடு

பெண் ஐபிஎஸ் பாலியல் புகார்: சிறப்பு டிஜிபி விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

webteam

பெண் எஸ்.பி.யால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபி விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளார். சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக, தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

அதனைத்தொடர்ந்து சிறப்பு டிஜிபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதனிடையே புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி-யை தடுத்து மிரட்டியதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பெண் எஸ்.பியை தடுத்த எஸ்.பி மீது நடவடிக்கை எடுத்த போது காவல் உயர் அதிகாரியை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பியது.