தமிழ்நாடு

வெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை - இளம்பெண் உயிரிழப்பு

வெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை - இளம்பெண் உயிரிழப்பு

rajakannan

கடலூரில் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

சன்றோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த‌ கார்த்தி-ஷர்மிளா தம்பதிக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷர்மிளா சிகிச்சை பெற்று வந்துள்ளார். கர்ப்பபையில் கட்டி உள்ளதாகவும், அறுவைச் சிகிச்சை மூலம் அதனை நீக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தபோது உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.

‌அப்பெண் உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மேலும் உடல்நிலை மோசமானதால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதலில் அறுவைச்சிகிச்சை செய்த கடலூர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ததுதான் உயிரிழப்பிற்கு காரணம் என உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள், மருத்துவர்களை தொலைபேசியில் அழைத்து கேட்டபோது, வெண்டிலேட்டர் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்தது ‌தவறு என்று ஒப்புக்கொண்டுள்ளனர். தொலைபேசி உரையாடல் மூலம் தனியார் மருத்துவமனை மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.