தமிழ்நாடு

கட்டணத்திற்காக கணவரின் கிட்னி, இதயம், கண்களை கேட்கிறார்கள் - மருத்துவமனை மீது பெண் புகார்

webteam

மதுரையில் சிகிச்சைக்கான பணத்திற்காக நோயாளியின் உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக தனியார் மருத்துவமனை மீது நோயாளியின் மனைவி புகார் அளித்துள்ளார்.

மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் தேநீர் கடை வைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திடீரென இவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.5 லட்சம் செலவில் வீரபாண்டியின் உடல்நிலையை சரி செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை அளித்து வீரபாண்டி குடும்பத்தினரை ரூ.1 கோடி வரை மருத்துவ செலவு செய்ய வைத்துள்ளதாக தெரிகிறது.

தனது சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து சிகிச்சைக்கான பணத்தை செலுத்திய நிலையில், கடந்த 7ஆம் தேதி வீரபாண்டி முளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதித்தொகையை கட்டுமாறும் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வீரபாண்டியின் மனைவி நிதியா வேதனையுடன் கூறியுள்ளார்.

அத்துடன் ரூ.1 கோடி ருபாய் செலவு செய்த நிலையில், மேலும் தங்களிடம் கட்டணம் செலுத்த பணம் இல்லை என நித்யா தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் வீரபாண்டி மூளைசாவு அடைந்ததால், அவரது இதயம், கிட்னி, கண் ஆகியவற்றை விற்பனை செய்து மருத்துவத்திற்கான பணத்தை எடுத்துக்கொள்வோம் என மிரட்டியதாக நித்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார் அளிக்கமாறு காவல்துறையிடம் அவர் முறையிட்டுள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடம் கேட்ட போது, வீரபாண்டி உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் மூளைச்சாவு அடையவில்லை எனவும் கூறினார். நித்யா மருத்துவமனையிடம் ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் மருத்துவமனையை ஒருவழி செய்துவிடுவோம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வீரபாண்டி குடும்பத்தினர் சிகிச்சைக்காக ரூ.97 லட்சம் செலவு செய்யவில்லை எனவும், ரூ.27 லட்சம் மருத்துவமனைக்கும், 11 லட்சம் மருந்தகத்திற்கும் கொடுத்துள்ளதாக கூறினார்.