தமிழ்நாடு

16 நாட்களுக்குமுன் புதைக்கப்பட்ட உடல்-சாவில் சந்தேகம் என தோண்டி எடுப்பு..வேலூரில் பரபரப்பு

சங்கீதா

கணவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக பெண் அளித்த புகாரை அடுத்து, 16 நாட்கள் கழித்து புதைக்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் பேபிகலா (40) - சோமசேகர் தம்பதியர். இருவருக்கும் முதல் திருமணம் ஆகி விவாகரத்துக்கு பின்னர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்குப் பின்னர் சோமசேகர் மற்றும் அவரது தாய், பேபிகலாவை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த மாதம் 19-ம் தேதி பேபிகலா பாகாயம் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் மாமியார் மீது புகார் அளித்துள்ளார்.

அன்றைய தினமே பேபி கலா சென்னையிலுள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், கடந்த மாதம் 28-ம் தேதி பேபி கலா தனது உறவினர்களுடன் பாகாயம் காவல் நிலையம் சென்று கணவரை அழைத்து விசாரணை செய்து சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார். அப்போது பேபிகலாவின் கணவர், ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும், மறுநாள் சுடுகாட்டில் அடக்கம் செய்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பேபிகலா, பின்னர் கணவர் இறப்பு குறித்து மாமியார் மற்றும் அவரை சார்ந்தவர்கள் எந்த தகவலும் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்து இருக்கிறார்கள். மேலும் கணவர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, 16 நாட்களுக்கு முன் புதைக்கப்பட்ட சோமசேகர் உடல், வருவாய்த்துறை, மருத்துவக்குழு மற்றும் காவல் துறை முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகாயம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.