தமிழ்நாடு

‘மனுவாக தாக்கல் செய்தால் அதிமுக கொடிக் கம்பம் விழுந்தது குறித்து விசாரணை’ - நீதிபதிகள் 

webteam

கோவையில் அதிமுக கொடிக் கம்பம் விழுந்ததால், லாரியில் சிக்கி இளம் பெண் படுகாயமடைந்த விவகாரம் குறித்த முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வரும் அவர், கடந்த 11ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, பீளமேடு பகுதியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் சரிந்ததாக கூறப்படுகிறது. அதனால், சாலையில் விழுந்த ராஜேஸ்வரியின் கால்கள் மீது லாரி ஏறி, படுகாயமடைந்தார். 

இதில் விஜயானந்த் என்பவரும் லாரின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து மனுத்தாக்கல் செய்‌ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிட்டார். மனுவாக தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்றனர். 

மேலும், மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தகுந்த ஆவணங்களுடன் மனுத்தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.