தமிழ்நாடு

திருத்துறைப்பூண்டி: திருமணமான ஓராண்டுக்குள் பெண் எடுத்த விபரீத முடிவு-உறவினர்கள் போராட்டம்

Sinekadhara

திருத்துறைப்பூண்டி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்த பெண்ணின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தானந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி (20). இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தபோது வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நான்கு மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் காயத்ரி கல்லூரியில் மூன்றாம் ஆண்டு தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கு கேட்டபோது மாமனார், மாமியார் மற்றும் கணவர் அனைவரும் திட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் தேர்வு கட்டணத்தை காயத்ரியின் தந்தையிடம் சென்று பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாகக் கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் பெண்ணின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி திருவாரூர் சாலையிலுள்ள வேலூர் பாலத்தில் பெண்ணின் உறவினர்கள் இன்று அமரர் ஊர்தி வாகனத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி - திருவாரூர் இடையே சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.