கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீஸாரின் தீவிர நடவடிக்கைகளால் சற்று குறைந்திருந்த கந்துவட்டி கொடுமை தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை டவுன் பகுதியில் பெரியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முத்துமாரி, கோமதி தம்பதி. 3 குழந்தைகளுடன் வசித்துவந்த இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் முத்துமாரிக்கு ஏற்பட்ட முடக்குவாதம் குடும்பத்தையே முடக்கிப்போட்டது. கணவரின் மருத்துவ செலவுகளுக்காகவும், அன்றாட தேவைகளுக்காகவும் சிலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார் கோமதி. இதுநாள்வரை அதற்கு வட்டி மட்டுமே கட்டிவரும் நிலையில், மேலும் பணம் தரக்கோரி கடன் தந்தவர்கள் கோமதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த கோமதி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
கந்து வட்டி கொடுமையால் பாளையங்கோட்டையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட அவலம் 2 ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் தீவிர நடவடிக்கைகளால் குறைந்திருந்த கந்துவட்டி கொடுமை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். கந்துவட்டி கொடு்மைகளைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆதரவற்ற நிலையில் உள்ள கோமதியின் பிள்ளைகளுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்க வேண்டும் என்பதே உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.