வாணியம்பாடி அருகே அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த திலீப்குமார் நடத்தும் நகை அடகு கடையில், மர்ம பெண் ஒருவர் போலி தங்க செயினை அடகு வைத்து 1.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்க செயினில் கொக்கி மட்டும் உண்மையான தங்கமாக இருந்தது. அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அரப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர், திலீப்குமார். தும்பேரி கூட்டுச்சாலையில் நகை அடகுகடை நடத்தி வரும் நிலையில், இவரது நகை கடைக்கு காரில் வந்த பெண் ஒருவர், 3 சவரன் தங்க செயினை அடகு வைத்து 1லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுச்சென்றுள்ளார்.
பின்னர் அந்த நகையை, திலீப் குமார் சோதனை செய்த போது, தங்க செயினில் கொக்கி மட்டுமே தங்கம் எனவும், மற்றவை போலியென தெரியவந்த நிலையில், இதுகுறித்து, திலீப்குமார், அம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் இச்சம்பவம் குறித்து, அம்பலூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, போலியான தங்கநகைகளை விற்றுச்சென்ற பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். தங்க செயினில், கொக்கி மட்டுமே தங்கமாக வைத்து, மற்றவற்றை போலியாக வைத்து, பெண் ஒருவர் பணம் பெற்றச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.