தமிழ்நாடு

குடும்பத் தகராறில் இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை – போலீசார் விசாரணை

webteam

பெரியபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக அண்ணன் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிக்கைப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் திராவிட பாலு. இவர், எல்லாபுரம் திமுக ஒன்றிய கழகச் செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சிமன்ற தலைவராகவும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். திராவிட பாலு குடும்பத்தினருக்கும், சத்தியவேலு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியதில், திராவிட பாலுவின் மனைவி செல்வி (55), மகன் முருகன் (42), மருமகள் ரம்யா (32), முருகனின் மகன் கருணாநிதி (15) ஆகியோரை சத்திய வேலுவின் மகன் விஷால் (22) என்பவர் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில், 4 பேரும் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி ரம்யா (32) உயிரிழந்தார் .படுகாயமடைந்துள்ள 3 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி தலைமையிலான பெரியபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை தேடி வருகின்றனர். குடும்ப தகராறால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் பெரியபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.