தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் சென்றார். அப்போது அவரது அருகில் தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா என்ற பெண் தனது பெற்றேருடன் சென்று கொண்டிருந்தார். கனடாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்த இவர், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பின்புறம் அமர்ந்துகொண்டு பாரதிய ஜனதாவுக்கு எதிராக முழக்கமிட்டதாகத் தெரிகிறது.
விமானத்தில் இருந்து இறங்கிய பின்னர் விமானநிலையத்திலும் பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டதால் அவர் மீது அங்கிருக்கும் காவல்நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். அப்பெண் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “உயிருக்கு ஆபத்தான நிலை இருந்தது. ஏதேனும் ஒரு அமைப்பு பின்புலமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.