தமிழ்நாடு

நிறுத்தி வைத்த தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு

நிறுத்தி வைத்த தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட நீதிமன்றம் உத்தரவு

webteam

பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவ‌ட்டம் அப்பிபட்டியைச் சேர்ந்தவர் அஜித். இவர் பொறியியல் கல்லூரி மாணவர். அஜித் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்,எஸ்.சி.- எஸ்.டி. கல்வி உதவித் தொகை வழங்கப்படாத நிலையில், தாம் உள்பட 4 மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு, கல்வி உதவித் தொகை வழங்காததற்காக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை ஏற்க இயலாது என்றனர்.

மேலும், தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் கல்வி உதவித் தொகை வழங்காததற்காக நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு முடிவுகளை ஒரு வாரத்தில் வெளியிடவும் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக, தமிழக ஆதி திராவிடர் நலத்துறைச் செயலர், அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் ஆகியோர் அந்தந்த கல்லூரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆணையிட்டனர். மேலும் வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்