withdrawal of the sexual harrasement case TN Asswmbly
தமிழ்நாடு

கூட்டு பாலியல் புகாரில் சமரசம் : அமைச்சர் ஆனந்த் மீது குற்றசாட்டு., பின் புகார் வாபஸ்! நடந்தது என்ன?

அமைச்சர் ஆனந்த் மீது குற்றச்சாட்டை முன்வைத்த பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தவெக பெண் நிர்வாகி வழக்கை வாபஸ் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த தவெகவில் நிர்வாகியாக இருந்த பெண் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீவைகுண்டம் மகளிர் போலீசில் புகார் ஒன்று அளித்து இருந்தார். அதில், வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து அழைத்துச் சென்ற தவெக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் தன்னை காரில் அழைத்துச் சென்று மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறியிருந்தார்.

மேலும், இந்த சம்பவத்தின்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணனின் பெயரைப் பயன்படுத்தியதாகவும், சம்பவம் நடந்த பிறகு அந்த எம்எல்ஏ தரப்பில் இருந்து புகாரை வாபஸ் பெறச் சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அமைச்சர் மூலம் வேலை வாங்கித் தருவதாக சமரசம் பேசப்பட்டதாகவும் அந்த பெண் கூறியிருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தவெக நிர்வாகிகளைக் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள்

இதனிடையே தவெக பெண் நிர்வாகியின் புகார் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் என்.ஆனந்த், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும், அந்த விசாரணையின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனுக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சம்மந்தப்பட்ட பெண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணான என்னிடமே எந்தவித விசாரணையும் நடத்தாமல் புலன் விசாரணை எப்படி நடைபெற்றது? என்று கேள்வி எழுப்பிய அவர், எம்.எல்.ஏ சரவணனைக் காப்பாற்ற அமைச்சர் ஆனந்த் ஒருதலைப்பட்சமாகப் பேசுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் மீது பாலியல் புகார் அளித்த பெண் சமரசமாக செல்ல முடிவு செய்து இருப்பதாக அந்த பெண் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாலசுப்பிரமணியம், ஜெயபால் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தார். அமைச்சர் மீது குற்றச்சாட்டை முன்வைத்த பெண் வழக்கை திரும்ப பெற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.