வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கங்கள் டெல்லியில் கடந்த ஓராண்டு காலமாக போராடி வருகின்றனர். தொடர்ந்து மத்திய அரசு, இன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து இந்த அறிவிப்பை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் தஞ்சை ஆற்றுப்பாலத்தில் வெடி வெடித்தும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒருவருட காலமாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இன்னுயிர் நீத்த விவசாயிகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமெனவும், இதேபோல் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரையில் விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியினர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்ததை வரவேற்று பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த புதிய 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டெல்லியில் ஓராண்டு காலமாக போராடும் விவசாயிகளுக்கு கிடைத்த பெரிய வெற்றி என விவசாயிகள் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளிநாதம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் சங்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்., மேலும் ஓர் ஆண்டாக நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்த 697 விவசாயிகளுக்கு வீரவணக்கமும் செலுத்திய விவசாயிகள், இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெற்றாலும் தொடர்ந்து எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டது படி உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.