தமிழ்நாடு

வடகிழக்குப் பருவ மழை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

JustinDurai
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நடைப்பெறும் ஆலோசனையில், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். நகர்ப்புற, ஊரக பகுதியில் குடிநீர், சாலைவசதி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் கூடுதல் கவனம்செலுத்தி, பருவக்கால சவால்களை திறம்பட கையாள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று முதல்வர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்நிலைகளின் உள்கட்டமைப்புகளான கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை முதலமைச்சர் வழங்குவார் எனத் தெரிகிறது. மேலும், தமிழக அரசின் சார்பில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், மழை பொழிவு அதிகம் இருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கான நிவாரண முகாம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.