தமிழ்நாடு

கொரோனா எண்ணிக்கையில் தினம்தினம் அதிர்ச்சி: மையப் புள்ளியாகிறதா சென்னை?

கொரோனா எண்ணிக்கையில் தினம்தினம் அதிர்ச்சி: மையப் புள்ளியாகிறதா சென்னை?

webteam

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மாநில மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது கொரோனாவின் மையப்புள்ளியாக தலைநகர் மாறி வருகின்றதா என்ற ஐயம் மக்களுக்கு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 161 பேரில், 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தலைநகரில் கடந்த 6 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கின்றது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சுமார் 50% என்ற அளவில் இருந்தாலும், தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறையாதது சென்னை மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற மாவட்டங்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்க சென்னையில் தொற்று அதிகரித்து வருவது அவர்களது அச்சத்திற்கு மற்றொரு முக்கியக் காரணமாகும்.

கோயம்பேடு சந்தையில், 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தலைநகர மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகின்றனர். முழு முடக்கத்திற்கு முதல் நாள், காய்கறிகளை வாங்க கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கத் தவறியதே, கொரோனா வேகமாகப் பரவுவதற்கு காரணமாகப் பார்க்கப்படுகின்றது. முழு முடக்கத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு அரசு ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளித்தது போதாது என்பது பொதுமக்களின் அதிருப்திக் குரலாகும்.

இதுபோன்ற சூழலில், கொரோனா பணிகளுக்காக சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கையகப்படுத்துமாறு, மாவட்ட ஆட்சியரை மாநகராட்சி ஆணையர் கேட்டுக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பல்வேறு ஐயங்களை எழுப்பி இருக்கின்றது. நிவாரண முகாம்களை அமைப்பதற்குத்தான் இடங்களை கண்டறியுமாறு கூறியிருப்பதாக ஆணையர் கூறினாலும், அச்சம் அகலவில்லை. எதற்காக இந்த ஏற்பாடுகள் அனைத்தும் என்ற கேள்வி மேலோங்கி நிற்கின்றது. கொரோனா வைரஸ் வேகமெடுத்து அடுத்த கட்டத்தை, அதாவது சமூகத் தொற்றாக மாறி வருகின்றதா? என்ற கேள்வி சென்னை மக்களின் முன் நிற்கின்றது.