inflation on the rise in Tamil Nadu ANI
தமிழ்நாடு

அரிசி முதல் பருப்பு வரை | அதிகரித்த விலைவாசி உயர்வு.. உச்சம் தொட்ட பணவீக்கம்.. மக்கள் அவதி!

நாட்டிலேயே இல்லாத வகையில் தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொருள்களின் விலை உயர்ந்துள்ளது.

Praveen Joshva L

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 4.83%-ஆக இருந்த இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் (Retail Inflation), செப்டம்பர் மாதத்தில் 5.54%-ஆக உயர்ந்துள்ளது. அதிலும் உணவு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 5.97% ஆக இருந்த நிலையில், செப்டம்பரில் 7.74% ஆக உயர்வு கண்டுள்ளது. அதோடு இந்த அறிக்கையில், 6.81 சதவீத பணவீக்கத்துடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் உணவுப் பணவீக்கம் (Food Inflation) 10.62% ஆக உயர்ந்து இதிலும் முதலிடத்தைப்பிடித்துள்ளது.

இதன்படி, துவரம் பருப்பு 120-ல் இருந்து 150 ரூபாய் அளவிலும், கடலைப் பருப்பு 75-ல் இருந்து 100 ரூபாயாகவும், பாசிப்பருப்பு 100ல் இருந்து 115 ரூபாயாகவும், கருப்பு கொண்டைக் கடலை 75- இருந்து 110 ரூபாயாகவும், வெள்ளைக் கொண்டைக் கடலை 75- இருந்து 125 ரூபாயாகவும், சர்க்கரை 47-ல் இருந்து 56 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், அரிசி விலை 26 கிலோ பை ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.350வரை உயர்ந்துள்ளது. புழுங்கல் பொன்னி அரிசி மூட்டை 1,900-ல் இருந்து .2,150 ரூபாயாகவும், பொன்னி அரிசி 1,700-ல் இருந்து 2,050 ரூபாயாகவும், பச்சரிசி 2,000-ல் இருந்து 2,100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இந்தச் சூழலில், சமையல் எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது என்பதால் எண்ணெய் விலை மட்டும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசியப் பொருள்களுக்கு பிற மாநிலங்களைச் சார்ந்து இருப்பதே, தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைவிட இந்த அளவு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர முக்கியக் காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவில் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது.

இது தவிர பருவமழை குறைவாகப் பெய்தது, சர்வதேச அளவில் ரூபாயின் மதிப்பு சரிந்ததால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்தது ஆகியவையும் விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதோடு, இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களைச் சில வியாபாரிகள் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மத்திய அரசு நெல்லுக்கான ஆதரவு விலையை உயர்த்தியது, உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பு , உரங்களின் விலை உயர்வு, டீசல் விலையேற்றம் மற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு ஆகியவையே இந்திய அளவில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து பணவீக்கம் உயர முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

பண்டிகைக் காலம் நெருங்கியுள்தால், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.