தமிழ்நாடு

தமிழகத்தில் ஆன்லைன் ஆப் மூலம் கொடிகட்டி பறக்கும் கேரளா லாட்டரி - கள ஆய்வில் பகீர் தகவல்கள்

webteam
கேரளா லாட்டரி பேஸ் புக், வாட்சப் என ஆனலைன் வாயிலாக அதிகப்படியாக தமிழகத்தில் விற்பனையாகிறது. இதுகுறித்து புதிய தலைமுறை மேற்கொண்ட கள ஆய்வில் கிடைத்த தகவல்களை தற்போது காணலாம்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூன்று நம்பர் லாட்டரி, கேரளா லாட்டரிகளை மறைமுகமாக விற்பனை செய்வது என தமிழகத்தில் ஆங்காங்கே பல சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதன்மீது தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையும் நாம் பார்க்க முடிகிறது. லாட்டரி தடைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, நடுத்தர வர்க்க மக்கள் அதிர்ஷ்டத்தை நம்பி தங்களது பெரும்பான்மையான பணத்தை இழப்பதும் வேலைக்கு செல்லாமல் லாட்டரியை நம்பி மனித வளம் சீரழிவதையும் தடுப்பதற்கே முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் தற்போது ஆன்லைன் மூலமாக தமிழகத்தில் லாட்டரி விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவது நாம் மேற்கொண்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஃபேஸ்புக் வாட்சப், டெலிகிராம் என குறுந்தகவல் ஆப்கள் மூலமாக லாட்டரி விற்பனை நடைபெறுகிறது. இதில் லாட்டரி வாங்க பணம் அனுப்பும் செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பினால் அதற்கு தேர்ந்தெடுக்கும் லாட்டரி புகைப்படத்தை அனுப்புகிறார்கள். பின்னர் மூன்று மணி அளவில் குலுக்கல் முடிவுகள் வரும் போது, அதன் அடிப்படையில் பரிசுகள் விழுந்தால் அதனை கூகுள் பே உள்ளிட்ட பணம் அனுப்பும் செயலிகள் மூலமாக திருப்பி அனுப்புவதாக தெரிவிக்கின்றனர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோர்.
கேரள லாட்டரிகள் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பெயரில் விற்பனை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வின் வின் லாட்டரி, நிர்மல் லாட்டரி, காருண்யா லாட்டரி, ஸ்ரீ சக்தி லாட்டரி, 50 - 50 என வாரம் 7 நாட்களிலும் ஒவ்வொரு பெயரில் ஒரு கோடி ரூபாய் வரை பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டு லாட்டரிகள் விற்கப்படுகின்றன. அதுபோக பம்பர் லாட்டரிகளும் திருவிழா கால லாட்டரிகளும் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் வார லாட்டரிகள் ஒன்று 40 ரூபாய், 50 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஒரு செட் என்றால் 12 லாட்டரிகள் கொண்ட தொகுப்பு. ஒரு செட்டை 480 ரூபாய் முதல் 500 ரூபாய் வீதம் வரை விற்பனை செய்கின்றனர்.
கேரளா லாட்டரிகளை நம்பி பலரும் கூகுள் பே மூலமாக பணத்தை அனுப்பி குழுக்களில் பணம் விழாமல் ஏமாறுபவர்கள் ஒரு ரகம் என்றால், மற்றொரு ரகம் குழுக்களில் பரிசு அதிக தொகைக்கு விழுந்தால் விற்பனை செய்பவர்கள் பரிசுகளை வழங்காமல் அவர்கள்  தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்வதும் அரங்கேறுகிறது. அதன்பிறகு வெறும் லாட்டரி புகைப்படங்களைக் கொண்டு குழு நடத்தி பணத்தை சுருட்டும் ஏமாற்று வேலையும் நடைபெறுகிறது. பல்வேறு ரகங்களில் நடைபெறும் இதுபோன்ற லாட்டரி விற்பனைகளால் தமிழக மக்கள் ஏமாறக்கூடிய, பணத்தை இழக்கக்கூடிய  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பணத்தை இழந்த பலரும் நம்முடன் பேச மறுப்பு தெரிவித்து இருந்தாலும் இது போன்ற ஆன்லைன் லாட்டரி  விற்பனையை தடுக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் போன்ற உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். தமிழக காவல்துறையும் இதனை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.