தமிழ்நாடு

புலம்பெயர் தமிழர் நல வாரியம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கலிலுல்லா

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வெளிநாடுவாழ் தமிழர் நலச் சட்டம் கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டதை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மு.க.ஸ்டாலின், அரசு மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மாநில அரசின் புலம்பெயர் தமிழர் நலநிதி 5 கோடி ரூபாய் முன் பணத்தைக் கொண்டு இந்த வாரியம் உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மூலதனச் செலவினமாக 1.40கோடி ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புலம்பெயர் தமிழர் நல வாரியம் மற்றும் புலம்பெயர் தமிழர் நல நிதி, நலத்திட்டங்கள், வெளிநாட்டில் தமிழ்க்கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றம் ஆகியவற்றிற்காக மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ஆம் நாள் புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாகக் கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.