அவசர சிகிச்சைக்கு உடனடியாக ரத்தம் கிடைக்கும் வகையில் புதிய ரத்த கொள்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவிக்கவுள்ளது. இதற்கான வரைவு திட்டம் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதிய ரத்த கொள்கையின்படி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவக்ளுக்கு 45 நிமிடங்களில் பாதுகாப்பான ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 295 ரத்த வங்கிகளும், 519 ரத்த சேமிப்பு மையங்களும் உள்ளன. இவற்றில் இருந்து உடனடியாக அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் விபத்துகளில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடுபவர்களுக்கு வாழ்வளிக்க இது மிகுந்த பயனிளிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ஏழ்மையில் உள்ள கர்ப்பிணிகளுக்கும் சிகிச்சைக்காக ரத்தம் கிடைப்பதை உறுதி செய்ய புதிய திட்டம் வழிவகுத்துள்ளது. ரத்த தானம் செய்வோரின் முகவரி உள்ளிட்ட விவரங்களை ரத்த வங்கிகள் சேமித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டை, ரத்த தானம் செய்வோரை உடடினயாக அணுக உதவியாக இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அங்கீகாரம் பெற்ற ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ரத்தத்தில் நோய் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதையும் புதிய ரத்த கொள்கை உறுதி செய்யவுள்ளது.