சமூகநீதி முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான அரசாணையின் நூற்றாண்டு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதி அளவுகோல் சட்டப்படி இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க முடிவெடுத்துள்ளாதாக அவர் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி முறையாக முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை இந்தக் குழு கண்காணிக்கும்; வழிகாட்டும்; செயல்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.
சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு இக்குழு பரிந்துரை செய்யும் என கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், இதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். சமூகநீதி கண்காணிப்புக் குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், மற்றும் சட்ட வல்லுநர்கள் இடம்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.