ஷகீல் அக்தர்
ஷகீல் அக்தர் PT
தமிழ்நாடு

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் மாநில தகவல் ஆணையர் பதவியேற்பு விழாவில் முதல்வருக்கு அழைப்பில்லயா?

PT WEB

தமிழ்நாட்டின் பல்வேறு துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் சார்ந்து, பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்களால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பணியாகும்.

அப்படியான தமிழ்நாட்டின் அதிகாரமிக்க தலைமை தகவல் ஆணையர் மற்றும் நான்கு ஆணைய உறுப்பினர்களின் பொறுப்பிடங்களானது, கடந்த நவம்பர் மாதம் நிறைவடைந்தது. இதற்கான தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டு, அதற்கான அறிக்கையையும் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இரண்டு முறை புதிய தகவல் ஆணையர் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்ற நிலையில், கடந்த நவம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தரை தேர்வு செய்து பரிந்துரை கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

ஆளுநர் ரவி

அந்த பரிந்துரையை ஏற்ற ஆளுநர் ஷகில் அக்தரையும், மற்ற 4 உறுப்பினர்களையும் நியமிக்க உத்தரவிட்டார். தகவல் தலைமை ஆணையர் மற்றும் உறுப்பினர்கள் நான்கு பேரின் பதவியேற்பு விழா, ஓரிரு நாட்களில் சென்னை ராஜ்பவனில் கவர்னர் ரவி முன்னிலையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

மாநில தகவல் தலைமை ஆணையர் மற்றும் 4 உறுப்பினர்கள் யார் யார்?

1989-ம் பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான ஷகீல் அக்தர் கடந்த நவம்பர் மாதம் பணி ஓய்வு பெற்றார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான இவர் 1962-ம் ஆண்டு பிறந்தவர். முதுநிலை இயற்பியல் படித்தவரான இவர், தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டு தருமபுரி மாவட்டம் அரூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.

ஷகீல் அக்தர்

ஷகீல் அக்தர் திமுக ஆட்சி காலத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இந்நிலையில் ஓய்வு பெறும்போது சிபிசிஐடி டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஷகீல் அக்தர்

அவருடன் ஏடிஜிபி தாமரை கண்ணன், ஆர்.பிரியா குமார், டாக்டர் கே.திருமலைமுத்து, டாக்டர் எம்.செல்வராஜ் உள்ளிட்ட நான்கு தகவல் ஆணையர்களும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் இன்று பதவியேற்பு விழா!

மாநில தகவல் தலைமை ஆணையர் மற்றும் 4 ஆணைய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் செய்துவைக்கவிருக்கும் நிலையில், பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதில் முதலவர் பங்கேற்பாரா என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. முதல்வர் - ஆளுநர் வார்த்தை மற்றும் கருத்து மோதல் வலுத்துவரும் நிலையில், இன்று மாலை நடைபெற உள்ள இந்த பதவியேற்பில் முதல்வர் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், கடந்த முறை தலைமை ஆணையர் பதவியேற்ற போது அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் அவ்விழாவில் பங்கேற்கவில்லையென தெரிகிறது.