சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் பருவமழைக்கு முன்னர் முழுமையாக நிறைவடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மழைநீர் வடிகால் பணிகளின் தற்போதைய நிலை குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
பருவமழைக் காலத்தில் சாலைகளில் நீர் தேங்கி நிற்கும் நிலையை மாற்றும் வகையில் புதிய மழைநீர் வடிகால்களை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவளம் வடிநில பகுதி, கொசஸ்தலையாறு வடிநில பகுதி மற்றும் சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் வேளச்சேரி தொடங்கி திருவொற்றியூர் வரை பல்வேறு பகுதிகளிலும், இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பல பகுதிகளில் பணிகள் தொடங்கி மூன்று மாதங்களாகியும் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணிகள் நிறைவு பெறாமல் கம்பிகளும் கான்கிரீட் பலகைகளும், தடுப்புகளும் அப்படியே கிடப்பதால் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விளக்கமளித்த சென்னை மாநகராட்சி துணை மேயர், மகேஷ் குமார். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் தாமதத்தால் ஏற்படும் சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சென்னை மாநகராட்சி வரலாற்றில் ஒரே நேரத்தில் 1000 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 55 சதவீதத்துக்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு குறைவாகவே உள்ளதால், எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.