தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையர் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையர் தலைமையில் நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

webteam

மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு கடந்த சில தினங்கள் முன்பு பிறப்பித்தது.  இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலாலும் புரோஹித் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மேயர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், தமிழக அரசு இந்த அவசரச் சட்டத்தை பிறப்பித்தது.

இதனிடையே மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தலுக்கு பதிலாக மறைமுகத் தேர்தல் நடைபெறும் என தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகமாக தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீடு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ செ.கு.தமிழரசன் மனு தாக்கல் செய்துள்ளார். ஆகவே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நாளை காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித்தேர்தலை எந்தத் தேதியில் நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.