தமிழ்நாடு

குட்டிகளுடன் வந்த காட்டெருமைகள்... வாகனங்களை விட்டு தப்பியோடிய மக்கள்!

நிவேதா ஜெகராஜா

நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ்பார்க் குடியிருப்பு சாலை மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி மையம் அருகே திடீரென புகுந்த காட்டெருமைகளைக் கண்டு அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கேயே வாகனத்தை நிறுத்தி விட்டு ஓடியுள்ளனர். சுமார் ஒருமணி நேரம் தன் குட்டிகளுடன் அந்த இருசக்கர வாகனத்தை ஆக்கிரமித்திருக்கிறது அந்த காட்டெருமைகள். ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிகளுக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியை சுற்றி அதிகளவிலான வனப்பகுதிகள் உள்ளதால் கரடி, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் நகா்ப்பகுதியில் உலா வருவது வழக்கமாக உள்ளது. அப்படி நேற்று, சிம்ஸ்பார்க் குடியிருப்பு சாலை மற்றும் அரசினர் தொழிற் பயிற்சி மையப் பகுதியில் புகுந்த காட்டெருமைகள் அப்பகுதியிலேயே நீண்ட நேரமாக உலா வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்கள் காட்டெருமைகளைப் பார்த்து வாகனத்தை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஓடி உள்ளனர். இதைக்கண்ட அந்த காட்டெருமைகள், அந்த வாகனத்தின் மீது அமர்ந்துக்கொண்டிருக்கிறது.

சுமார் ஒரு மணி நேரம் வரை இருசக்கர வாகனத்தின் அருகில் அமர்ந்திருந்த அவை, தன்னோடு பிறந்து சில நாளே ஆன குட்டியையும் வைத்துக்கொண்டிருந்துள்ளனது. இதனால் தொழிற் பயிற்சி நிலையம் சாலையில் பின்வந்த வாகனங்கள் கூட்டமாக நிற்கத்தொடங்கிவிட்டன. பின்னர் ஒருமணி நேரம் கழித்து அவை கலைந்துசென்றுள்ளது. இந்த சாலையில் சுற்றுலாத் தளங்கள், கல்வி நிறுனங்கள் போன்றவை உள்ளதால் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த காட்டெருமைகளை வனத் துறையினா் அடா்ந்த வனப் பகுதிக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

- ஜான்சன்