சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில் கரும்பு தேடி அலையும் ஒற்றை மக்னா யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் யானைகள் அதிகளவில் உள்ளன. வனத்தில் இருந்து வெளியேறி உணவு தேடி வரும் காட்டு யானைகள் அண்மைக் காலமாக லாரியில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகியதால் பண்ணாரியில் முகாமிடுகின்றன.
இந்நிலையில் கரும்பை ருசிபார்த்த காட்டு யானைகளில் மக்னா யானை பண்ணாரி கோவில் வளாகத்தை சுற்றி வருகிறது. பண்ணாரி சோதனைச்சாவடிக்கு வந்த ஒற்றையானை நீண்ட நேரம் கரும்பு லாரியை எதிர்பார்த்து நின்றிருந்தது. இதனால் தமிழகம் கர்நாடக இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரக்கு வாகனங்கள் நீண்ட நேரமாக பண்ணாரி சோதனைச்சாவடியில் காத்திருந்தன.
இந்நிலையில் காட்டுயானை மெல்ல மெல்ல நடந்து காட்டுக்குள் சென்றது. கரும்பு தேடிவரும் காட்டு யானைகளால் பண்ணாரி சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவல பணியாளர்கள் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
பண்ணாரி முதல் ஆசனூர் வரை யானைகள் முகாமிட்டுள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.