சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் கூட்டம் கூட்டமாக பகல் நேரங்களில் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டு உள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சத்தியமங்கலம் அருகே உள்ள பசுவபாளையம் பகுதியில் பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கிராமத்தை ஒட்டி உள்ள தரிசாக கிடக்கும் பட்டா நிலங்களில் முகாமிட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று காலை பசுவபாளையம் கிராமத்தை ஒட்டி உள்ள பட்டா நிலத்தில் சுற்றி திரிவதை கண்ட கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரங்களில் கிராமத்தின் அருகே காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கு காரணமாக கிராமத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. இருப்பினும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளர்களை காட்டு யானைகள் தாக்க வாய்ப்புள்ளதால் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி: “எனது கணவர் இறப்புக்கு நீதி வேண்டும்”- நாமக்கல் சிறையில் இறந்த மாற்றுத்திறனாளியின் மனைவி