மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு எடுத்து சாப்பிட்ட யானைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடப்பது வழக்கம். அதேபோல் அவ்வழியாக வரும் கரும்பு லாரிகளில் இருந்து வீசப்படும் கரும்புகளை சாப்பிட்டு பழகிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன.
இந்நிலையில் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே கரும்புபாரம் ஏற்றிய லாரி வருவதைக் கண்ட யானைகள் லாரியை வழிமறித்து நின்றன. யானையை பார்த்த ஓட்டுநர் லாரியை அதே இடத்தில் நிறுத்தினர். பின்னர், லாரியில் இருந்த கரும்புகளை யானை எடுத்து சாப்பிட்டபடி நின்றன. தாய் யானை குட்டிக்கு கருப்புத் துண்டுகளை எடுத்துத் தந்தது. யானைகள் கரும்புகளை ஹாயாக சாப்பிட்டன.
அரைமணி நேரமாக யானை சாலையின் குறுக்கே நின்றதால் தமிழகம் கர்நாடக இடையே பயணிக்கும் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தமிழக கர்நாடக அரசு பேருந்துகள் வரிசையான அணிவகுத்து நின்றன. தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர் கரும்புகளை சுவைத்துக் கொண்டிருந்த யானைகளை சப்தம் போட்டு வனத்திற்குள் அனுப்பினர். இதையடுத்து அரைமணி நேர போக்குவரத்து பாதிப்புக்கு பின் வாகனங்கள் செல்லத் துவங்கின.