தமிழ்நாடு

காரை மறித்து பள்ளத்தில் தள்ளிய காட்டு யானை: பதைபதைப்புடன் உயிர்தப்பிய 3 பேர்

காரை மறித்து பள்ளத்தில் தள்ளிய காட்டு யானை: பதைபதைப்புடன் உயிர்தப்பிய 3 பேர்

kaleelrahman

பொள்ளாச்சி அருகே காரை,  காட்டு யானை பள்ளத்தில் தள்ளியது. இதில் மூன்று பேர் காயங்களுடன் உயிர் தப்பினர்.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சரவணன் (49). இவர், அதே பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரும் இவரது உறவினர்கள் இரண்டு பேரும் நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து நவமலையில் உள்ள சரவணன் குடியிருப்பிற்கு இரு கார்களில் சென்றுள்ளனர்.

அப்போது வால்பாறை கவியருவி பகுதியிலிருந்து நவமலை செல்லும் பாதையில் சென்றபோது அங்கே சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை இவர்கள் சென்ற பாதையின் குறுக்கே வாகனத்தை மறித்ததாகவும், இதனால் செய்வதறியாது திகைத்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியபோது வாகனத்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை முன்னால் சென்ற ஆம்புலஸ் ஓட்டுநர் சரவணன் ஓட்டிய காரை முட்டித் தள்ளியதாகவும் தெரிகிறது.

இதில் கார் சாலையை விட்டு பள்ளத்தில் இறங்கியது. பின்னர் காரை, யானை மூன்று முறை உருட்டியதாகவும், அப்போது அவ்வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்கள் யானையை காட்டுக்குள் விரட்டி காரில் சிக்கியிருந்த சரவணனை மீட்டு சிகிச்சைக்காக ஆழியாரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்தும் சென்றுள்ளனர். சிறு காயங்களுடன் உயிர் தப்பிய சரவணன் மற்றும் அவரது உறவினர்களை சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.