தமிழ்நாடு

கிருஷ்ணகிரி காட்டு யானையை ஊசிப் போட்டு பிடித்த கர்நாடகா !

jagadeesh

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதிக்குள் விடப்பட்ட கிராபர் காட்டு யானையை இன்று காலை கர்நாடக வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கர்நாடகாவிற்குள் புகுந்த அந்த யானை இரண்டு பேரை தாக்கியதை அடுத்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ச்சியாக பொதுமக்களை தாக்கி அச்சுறுத்தி வந்த கிராபர் என்கின்ற காட்டு யானை கடந்த 26-ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அன்று இரவே கிராபர் யானை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழக – கர்நாடக எல்லையில் விடப்பட்டது. தொடர்ந்து வேறு கூட்டத்துடன் சேர்ந்த கிராபர், முதுமலை மற்றும் கர்நாடக வனப்பகுதிக்குள் மாறி மாறி சென்று வந்தது. 

யானை கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் அது கடந்த சில தினங்களுக்கு முன்பு செயல் இழந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்த கிராபர் யானை, இரண்டு பேரை தாக்கியது. படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கிராபர் யானை தொடர்ந்து கிராமங்களுக்குள் சுற்றி வந்ததை அடுத்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கர்நாடக வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை குண்டல்பேட்டை அருகேயுள்ள படுகூர் பகுதியில் முகாமிட்டிருந்த கிராபர் யானையை 5 கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்ட கிராபர் யானை, எந்த வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுகிறது குறித்த விபரங்கள் தெரியவில்லை.