தமிழ்நாடு

வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த காட்டு யானை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

kaleelrahman

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து சரக்கு வாகனத்தின் முன்பிருந்த பூமாலையை காட்டுயானை பறித்துச் சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை தமிழகம் கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அங்கும் இங்கும் திருப்பியபடி மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதைத்தொடர்ந்து ஒற்றை காட்டுயானை அவ்வழியே கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி சென்ற சரக்கு லாரியை தடுத்து நிறுத்தியதோடு ஆக்ரோசமாக லாரியை நோக்கி ஓடிவந்தது. இதைக்கண்ட லாரி ஓட்டுநர் அச்சம் அடைந்தார். பின்னர், லாரியின் முன்பு கட்டப்பட்டிருந்த பூமாலையை பறித்துக்கொண்ட காட்டுயானை மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.

காட்டு யானை வாகனங்களை வழிமறித்தபடி நின்றதால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.