ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விலங்குகள் தண்ணீரைத்தேடி நீண்ட தூரம் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக வனக்குட்டைகளில் வெப்பக்காற்று வீசுகிறது. காட்டாறுகள் வறண்டு போனதோடு, நிலத்தடி நீரும் பெரிதும் சரிந்துவிட்டது. இதனால், பவானி சாகர் வனத்தில் முகாமிட்டுள்ள யானைகள் குடிநீர் தேவைக்காக மாயாற்றுக்கும், பவானி சாகர் அணை நீர்த்தேக்கத்துக்கும் செல்லத் தொடங்கியுள்ளன. ஏறக்குறைய 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்து யானைகள் தாகம் தணித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
தாய் யானையுடன் வரும் குட்டியானைகள் நீண்ட தூரம் நடக்க முடியாமல் சோர்வடைந்து இடையிலேயே நின்று விடுவதையும், பிற யானைகள் குட்டிகளை நீர்தேக்கப்பகுதிக்கு அழைத்துச்செல்லும் காட்சி, வறட்சியின் கொடுமையை உணர்த்துவதாக இருக்கிறது.