அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் இருந்து மெக்கானிக் ஒருவரை கீழே தள்ளி கொல்ல முயன்ற வழக்கில் ஒரு பெண் உட்பட நான்கு நபர்களை அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஓடும் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாக கடந்த டிசம்பர் 29ம் தேதி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சென்னை ஆவடியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 30) என்பதும், இவர் அம்பத்தூரில் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து ராஜேந்திரன் ரயில்வே போலீசாரிடம் அளித்த புகாரில் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 29 ஆம் தேதி மதியம் சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் மதியம் ஆவடி ரயில் நிலையத்தில் ரயில் ஏறியதாகவும், அது அரக்கோணம் திருத்தணி இடையே சென்றபோது தன்னை 3 பேர் ரயிலிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதனால் படுகாயமடைந்த அவர் நினைவை இழந்து, மாலை வரை அங்கே கிடந்ததாகவும் தனக்கு நினைவு திரும்பிய பிறகு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்ந்த அவர், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறியுள்ளார்.
மேலும் தன் மனைவி அஸ்வினியே கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக காவல்துறையிடம் கூறியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அரக்கோணம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரனையில் ராஜேந்திரனி்ன் மனைவி அஸ்வினிக்கும் அவரது நண்பர்கள் சென்னை செம்பியத்தை சேர்ந்த அனுராக் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும் அதனை தட்டிக்கேட்ட ராஜேந்தரனை கொல்ல திட்டமிட்டு ஒடும் ரயிலிருந்து கிழே தள்ளி கொலை செய்ய முயன்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அஸ்வினி, அனுராக் மற்றும் கமலேஸ்வரன், தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த அரக்கோணம் ரயில்வே போலீஸார் பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.