செய்தியாளர் ஆனந்தன்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் 4 வது வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (44), இவரது மனைவி அமலி (40), இவர்களுக்கு ஏ.அமல இன்பென்சியா 13, இதய இமான்ஷன் 7 என இரு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் அளித்த அமலி, தன்னை கணவர் தொந்தரவு செய்வதாகவும், வரதட்சணையாக வழங்கப்பட்ட 38 பவுன் நகையையும் பறித்துக்கொண்டு தன்னை வீ்டடிலிருந்து வெளியேற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது கணவர் வெளிநாட்டிற்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்து அவரது பாஸ்போர்ட்டை முடக்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அமலி புகாரின் அடிப்படையில் காரைக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனாலும், கணவர் அமிர்தராஜ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அமலி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரோ பிரவீன் உமேஷிடம் முறையிட்டார். அமலி பல முறை புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் அமிர்தராஜ் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.
ஆத்திரமடைந்த அமலி ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தின் முன்பு தனது மகனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கணவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார்; உடனடியாக போலீசார் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம், காவல்துறை உயரதிகாரிகள் சமரசம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் 30 நிமிடமாக போராட்டம் நடத்திய அமலி போராட்டத்தினை கைவிட்டு திரும்பினார். இதன்காரணமாக அப்பகுதியில் சற்றுநேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.