தமிழ்நாடு

6 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டுக்கு சென்றதாக கூறப்பட்டவர் வீட்டிலேயே புதைக்கப்பட்டார் ! ஓர் அதிர்ச்சி தகவல் 

6 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டுக்கு சென்றதாக கூறப்பட்டவர் வீட்டிலேயே புதைக்கப்பட்டார் ! ஓர் அதிர்ச்சி தகவல் 

webteam

வெளிநாட்டிற்குச் சென்றுதாக கூறப்பட்ட நபர் 6 ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டு அவரது வீட்டிலேயே புதைக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

கடலூர் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த முருகதாஸ் என்பவர், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு 2013ஆம் ஆண்டு விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்தார். அதன்பின் அவரைக் காணாததால், உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அவர் கிடைக்காத நிலையில், முருகதாஸ் மீண்டும் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டதாக, அவரது மனைவி சுமிதா கூறியுள்ளார். அதன்பின் சுமிதாவும், முருகதாஸின் தம்பி சுமேரும் தலைமறைவாகினர். அவர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாத நிலையில், முருகதாஸுன் பாஸ்போர்ட்டை, வீட்டை சுத்தம் செய்தபோது அவரது தாய் பவுனம்மாள் கண்டெடுத்துள்ளார். 

பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டிற்கு எப்படி செல்ல முடியும் என சந்தேகமடைந்த பவுனம்மாள், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், சுமிதாவும், சுமேரும் கேரளாவில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்ததில், சுமிதாவுக்கும் - சுமேருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அதனை வெளிநாட்டில் இரு‌ந்து திரும்பிய முருகதாஸ் கண்டித்ததும் தெரியவந்தது. அதனால், முருகதாஸை அவரது மனைவி சுமிதாவும், தம்பி சுமேரும் இணைந்து கொலை செய்து, வீட்டிலேயே புதைத்துவிட்டு, வெளிநாடு சென்றுவிட்டதாக நாடகமாடியதும் அம்பலமானது. பிறகு சுமிதாவையும், சுமேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். முருகதாஸின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து எலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. கணவனையே கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி, பாஸ்போர்டால் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.