சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் தகாத உறவு கொண்ட நபருடன் சேர்ந்து கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னையை அடுத்த திருநின்றவூர் அருகே கூவம் ஆற்றில் கடந்த 16ஆம் தேதி அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது. குடிபோதையில் ஆற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என திருநின்றவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில், திருநின்றவூர் காவல் நிலையத்திற்கு வந்த செங்கல் சூளை உரிமையாளர் சுரேஷ் என்பவர் அளித்த தகவலின்பேரில் மணிகண்டன், பூமிநாதன், ஐயனார் ஆகியோரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது மணிகண்டன் என்பவருக்கும், குமார் என்பவரின் மனைவி செல்விக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாகவும், இது குமாருக்கு தெரியவந்ததையடுத்து இவர்கள் கூடுவாஞ்சேரி அருகே வீடு மாறிக் குடிபோனதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 மாத காலமாக மணிகண்டனைப் பார்க்காமல் தவித்த செல்வி, கடந்த 10ஆம் தேதி குமாருக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து தூங்க வைத்துள்ளார். பின்னர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார்.
தனது நண்பர்கள் அய்யனார் மற்றும் பூமிநாதனுடன் வந்த மணிகண்டன், தூங்கிக் கொண்டிருந்த குமாரை செல்வியுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் நண்பர்கள் உதவியுடன் திருநின்றவூர் ராஜாங்குப்பம் அருகே கூவம் ஆற்றில் அரைகுறையாக புதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். குடிபோதையில் இதனை மூவரும் உளறியதையடுத்து கொலை பற்றி தெரியவந்துள்ளது. மூவர் அளித்த தகவலின் அடிப்படையில் செல்வியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.