Madras high court
Madras high court pt desk
தமிழ்நாடு

பணத்தை ஏன் இன்னும் செலுத்தாமல் இருக்கிறீர்கள்? நடிகர் விஷாலிடம் நீதிமன்றம் சரமாரி கேள்வி

webteam

நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்நிலையில், அந்த தொகையை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, ‘வீரமே வாகை சூடும்’ என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

actor vishal

15 கோடி ரூபாயை வழக்கின் கணக்கில் செலுத்தவும், சொத்து ஆவணங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டதன் அடிப்படையில், சொத்து ஆவணங்களை மட்டும் தாக்கல் செய்த விஷால், 15 கோடி ரூபாயை இதுவரை செலுத்தவில்லை.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லைகா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி விஷால் தாக்கல் செய்த வங்கி பரிவர்த்தனைபடி 80 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், பணம் இருந்தும் வேண்டுமென்றே தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை விஷால் செலுத்தாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

அது தொடர்பான மெமோ தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறிய லைகா தரப்பு வழக்கறிஞர் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையில் பாதி தொகையையாவது டெபாசிட் செய்ய விஷாலுக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், மெமோவிற்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

court order

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பணத்தை ஏன் இன்னும் திரும்ப செலுத்தாமல் இருக்கிறீர்கள், செலுத்த வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், பணத்தை செலுத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், அவர்கள்தான் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.