காவலர்களுக்கு ஏன் வார விடுமுறை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
காவலர்களின் நலன் மற்றும் பணிச்சுமையை குறைப்பது தொடர்பான வழக்கு விசாரணையின் போது நீதிபதி கிருபாகரன் இந்தக் கேள்வியை எழுப்பினார். இந்த வழக்கில் கடந்த முறை நடந்த விசாரணையின் போது காவல் துறையினரின் நலன் குறித்து நீதிபதி கிருபாகரன் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். இதற்கு தமிழக டிஜிபி சார்பில் கூடுதல் ஐஜி மகேஷ்வரன் பதில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் காவல்துறை பணி அத்தியாவசியத் சேவையின் கீழ் வருவதால் சரியான விடுமுறை தினத்தை நிர்ணயிக்க முடியவில்லை எனக் கூறியிருந்தார். மேலும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு காவலர்கள் நியமிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விளக்கம் கொடுத்திருந்தார். இந்த விளக்கத்தை ஏற்ற நீதிபதி கிருபாகரன் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என்ற முறையை ஏன் அமல்படுத்தகூடாது? என கேள்வி எழுப்பினார். மேலும் இது தொடர்பாக உள்துறை செயலாளர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.