தமிழ்நாடு

திடீர் விசுவாச அரசியல் ஏன்?.. ஓபிஎஸுக்கு ஸ்டாலின் கேள்வி

திடீர் விசுவாச அரசியல் ஏன்?.. ஓபிஎஸுக்கு ஸ்டாலின் கேள்வி

webteam

முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் குறித்து பேசாத ஓ.பன்னீர்செல்வம், தற்போது திடீரென விசுவாச அரசியல் காட்டுவது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படத்தை அகற்ற வேண்டும் என வலியுறுத்திய ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், அரசின் சார்பில் ஜெயலலிதாவின் பெயரும், படமும் இடம்பெறுவது சட்ட விரோதமானது‌ என்று குறிப்பிட்டுள்ளார். பதவி பறிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மம் குறித்து பேசும் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சராக இருந்தபோது அதுபற்றி விசாரிக்க செய்த ஏற்பாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். பதவி கிடைக்கும் என்றால் ஜெயலலிதாவை மறந்துவிடுவதும், பதவி போன பிறகு அரசியல் செய்ய எதுவும் கிடைக்காவிட்டால், மீண்டும் அவரது படத்தையும், சமாதியையும் திடீரென பயன்படுத்துவதும் பன்னீர்செல்வம் போன்ற அதிமுக நிர்வாகிகளுக்கு வழக்கமாகிவிட்டதாக விமர்சித்துள்ளார். பதவி சுயநலத்திற்காக ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான மர்மங்களை மறைத்தவர்கள், இப்போது திடீரென விசுவாசம் காட்டும் விநோதம் குறித்த உண்மை மக்களுக்குத் தெரியும் என்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.