தமிழ்நாடு

டாஸ்மாக் கடையை திறக்கும் அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? - எல்.முருகன்

webteam

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் விநாயகர் சிலையை நிறுவவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஏற்கெனவே தமிழக அரசின் தடையை மீறி விநாயகர் சிலையை நிறுவுவோம் என இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்தது.

இதனிடையே பாஜக மாநில தலைவர் எல்.முருகனும், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட  அனுமதிகோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று அறிக்கை விட்ட தமிழக அரசு விநாயகர் சிலை நிறுவவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் “இந்து முன்னணி கடந்த 40 வருடங்களாக விநாயகர் சிலையை தெருக்களில் வைத்து கொண்டாடி வருவது வழக்கம். எல்லோரும் வீட்டில்தான் கொண்டாடி வருகிறோம். இதன் பிறகு இந்து முன்னணி நிலைப்பாட்டை பாஜக பின்பற்றும். எங்கள் நிலைப்பாட்டை அரசுக்கு எடுத்துரைத்தோம். அவர்கள் செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள் எல்லா மாநிலத்துக்கும் பொருந்தும். மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டல் படி இபாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவே அனுமதி கோருகிறோம். ஊர்வலத்திற்கு அல்ல. டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி கொடுக்கும் தமிழக அரசு விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுப்பது ஏன்? விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு அனுமதி தராதது புரியாத புதிராக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாகவுள்ளது.” எனத் தெரிவித்தார்.