விஜயை முதல்வராக்கக் கூடாது என்கிற நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து அமைச்சரவை அமைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பழனிசாமி முதல்வர் எனும் முன்மொழிவை இடதுசாரிகள் நிராகரித்துள்ளன.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற தவெக தனிக்கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில், விசிக, இடதுசாரிகள், காங்கிரஸ், ஐஎம்யூஎல் உள்ளிட்ட ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்த நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு, விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு அளிக்க தாமதமானதன் பின்னணி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. விஜயின் தவெக, தனித்து வந்தபோதும், அவருக்குப் பெரும்பான்மை கிடைக்காததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடினார். அப்போது முன்கூட்டியே திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அக்கூட்டணியை முறித்துக்கொண்டு போய் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே, விஜயை முதல்வராக்கக் கூடாது என்கிற நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து அமைச்சரவை அமைக்க பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பேசப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், பழனிசாமி முதல்வர் எனும் முன்மொழிவை இடதுசாரிகள் நிராகரித்துள்ளன.
மேலும், திமுக - அதிமுக இணைந்தால், மக்கள் மத்தியில் அதிருப்தியாகும் வாய்ப்பு அதிகம் இருந்தது. இதைத் தவிர்க்க இருதரப்புக்கும் பொதுவான விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தலாம் என்றும், அதனை இடதுசாரிகள் ஆதரிக்கும் எனவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தி திமுக -அதிமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்ததை, அதிமுகவில் ஒருதரப்பினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தவெகவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்தன.
அதேநேரத்தில் வி்சிக உடனடியாக ஆதரவைத் தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில், திமுக - அதிமுக கூட்டணி அமையாததாலும் திருமாவின் கனவும் நிராசையாக போய்விட்ட காரணத்தாலும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என திருமாவுக்கு கட்சிக்குள் அழுத்தம் அதிகமானதாகவும், அதை தொடர்ந்து, தவெகவுக்கு ஆதரவளிக்க திருமாவளவன் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பிறகே தவெக ஆட்சி மலர்ந்தது. அதேநேரத்தில் அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவின் பின்னணியும் இதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் திமுக கூட்டணியை விரும்பாத மூன்றில் இரு பங்கு அதிமுக எம்எல்ஏக்கள், அதற்குப் பதிலாக தவெகவுடன் கை கோப்பதே மேல் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பத்திரிகையாளர் கோலப்பனின் எக்ஸ் தளப் பதிவும் இதனை உறுதி செய்துள்ளது. தவிர, தமிழக அரசியல் களத்தில் இத்தகவல் புயலைக் கிளப்பியுள்ளது.