செய்தியாளாகள்: ரமேஷ் கண்ணா, பிரசன்னா
பிரேத பரிசோதனை அறிக்கையை யார் யாருக்கு எத்தனை நாட்களுக்குள் வழங்க வேண்டும்:
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின் பிரிவு 621-இன் படி குற்ற வழக்கில் மேற்கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனைச் சான்றிதழை, பிரேத பரிசோதனை முடிந்தவுடன், அதே நாளில் சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும் மருத்துவமனையின் முதல்வருக்கும் இறந்து போனவரின் குடும்பத்தினருக்கும் அனுப்ப வேண்டும். ஆனால், சந்தேகத்திற்கிடமான பிரேத பரிசோதனை அறிக்கைகள் குறித்த தகவல்களை பல சமயங்களில் இந்த நடைமுறை காவல்துறையின் அழுத்தத்தால் முறையாக பின்பற்றப்படாமல் சட்ட விதிமுறை தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது.
பிரேத பரிசோதனை வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும்:
மாநிலம் முழுவதும் இதே நிலைதான். யதார்த்தமாக இருக்க வேண்டும் எனக் கூறிய மதுரை உயர் நீதிமன்ற கிளை, இறந்தவரின் உறவினர்கள் கோரினால் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும். பிணவறைகளில் எந்நேரமும் கண்காணிப்புக் கேமராக்கள் செயல்பட வேண்டும், மிகவும் முக்கியமான குறிப்பாக பிரேத பரிசோதனை அறிக்கையின் நகல் மற்றும் வீடியோ பதிவை இறந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் இது அவர்கள் சட்டப்பூர்வ தீர்வுகளை நாட உதவும் என 13 உத்தரவுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டது.
உயிரிழந்த நபருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது:
ஆனால், தென் மாவட்டங்களில் உயர் நீதிமன்றத்தின் இத்தகைய முக்கியமான உத்தரவு காற்றில் பறக்கிறது. இதனால் இறந்து போன நபருக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
உதாரணத்திற்கு, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் காளையன். கடந்த ஜனவரி 15ஆம் தேதி சந்தேகத்திற்கிடமான முறையில் காளையனின் உடலை ஏரியிலிருந்து காவல்துறையினர் மீட்கிறார்கள். தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக இவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை காளையனின் குடும்பத்தினருக்கு தற்போது வரை கொடுக்காமல் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
நீதிமன்றம் தலையிட்ட பின்பே நடவடிக்கை எடுத்தார்கள்:
தனது மகன் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் காவல்துறை சார்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் காளையனின் தந்தை வழக்கு தொடுத்தபின் காவல்துறை முதல் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் கொடுத்தது அதை தொடர்ந்து அதன் மீது நம்பிக்கை இல்லாமல் மீண்டும் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என முறையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மறுபிரேத பரிசோதனை செய்த பிறகும் அதன் அறிக்கையும் தற்பொழுது வரை காளையன் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை தர மறுத்த காவல் துறையினர்:
இதேபோல் ஆண்டிபட்டி அருகே காட்டுப்பகுதிக்குள் மணி மற்றும் கருப்பையா ஆகிய இரண்டு விவசாயிகள் உடலில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இறந்து போனவர்களின் குடும்பத்தினர் முன்விரோதத்தால் கொலை செய்யப்பட்டார்கள் என புகார் அளித்த நிலையில் காவல்துறையினர், வனவிலங்கு தாக்கியதால் தான் இருவரும் உயிரிழந்தார்கள் எனக் கூறி வருகிறார்கள். பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் மிகவும் எளிதாக வெட்டுக்காயங்களா? அல்லது வனவிலங்கு தாக்கியதால் உயிர் இழந்தார்களா? என அந்த முக்கியமான பிரேத பரிசோதனை அறிக்கையை கடந்த 6 நாட்களுக்கும் மேலாக தற்போது வரை இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் வழங்க மறுத்து வந்தார்கள்.
இதைத் தொடர்ந்து இறந்து போனவர்கள் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் கடந்த 7 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபென் அளித்த விளக்கத்தை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.