தமிழ்நாடு

“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை?” - நீதிபதிகள் கேள்வி

“தமிழ்நாட்டில் தடுப்பணைகட்ட ஏன் முயற்சிக்கவில்லை?” - நீதிபதிகள் கேள்வி

rajakannan

தமிழகத்தில் தடுப்பணை கட்ட ஏன் அரசியல்வாதிகள் முயற்சிக்கவில்லை? என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மதுரையை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “பேரையூர் தாலுகா, வண்டாரி , டி. கிருஷ்ணாபுரம் , துள்ளுதாயக்கன்பட்டி , விட்டல்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களுக்கிடையே அணை கட்டுவதற்கு டேராப்பாறை திட்டம் என்ற பெயரில் 1984ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த அணை கட்டப்பட்டால் சேடப்பட்டி, டி.கல்லுப்பட்டி உள்ள கிராமங்களில் விவசாயம் செழிப்பாவதுடன் , தண்ணீரை சேமித்து வைக்கவும் பயனுள்ளதாக அமையும். ஆனால் டேராப்பாறை அணை திட்டம், காலப்போக்கில் காரணமே தெரியாமல் கைவிடப்பட்டது.

இதற்கிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட வருவாய் அதிகாரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அந்த ஆய்வறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் அணை கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் செழிப்பதற்கும் தொழில் வளம் பெருகுவதற்கும் மூலாதாரமாக இருக்கும் டேராபாறை அணை திட்டத்தினை விரைந்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிற மாநிலங்களில் அணை கட்டுபோது அதற்கு எதிராக போராடும் அரசியல்வாதிகள், தமிழகத்தில் தடுப்பணைகளைக் கட்ட ஏன் முயலவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அத்தோடு, தமிழகம் பிற மாநிலங்களின் உபரிநீரை விடும் வடிகால் போல பிற மாநிலங்களால் கையாளப்பட்டு வருவதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள் தமிழக அரசுக்கு 9 கேள்விகளையும் எழுப்பினர். 

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:-

  • தமிழகத்தில் மொத்தம் எத்தனை ஆறுகள் உள்ளன?
  • எத்தனை கிளை ஆறுகள் உள்ளன?
  • ஆறு மற்றும் துணை ஆறுகளின் கொள்ளளவு என்ன?
  • மழை காலங்களிலும், பிற காலங்களிலும் இந்த ஆறுகளிலிருந்து எவ்வளவு தண்ணீர் வீணாக சென்று கடலில் சென்று கலக்கிறது?
  • எந்தெந்த ஆறுகளுக்கு இடையே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன?
  • தமிழகத்தில் மொத்தம் எத்தனை தடுப்பணைகள் உள்ளன?
  • தமிழத்தில் புதிதாக தடுப்பணை கட்டும் திட்டம் ஏதும் உள்ளதா?
  • தமிழகத்தின் அனைத்து ஆறுகளுக்கும் இடையே ஏன் தடுப்பணைகளை கட்டப்படவில்லை?
  • இது தொடர்பாக ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா?

இதனையடுத்து, மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.