ஜெயலலிதா மகள் என்று உரிமை கொண்டாடி உச்சநீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த மனுவில் விரிவாகப் பல விபரங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்.
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி, ஜெயலலிதாவுக்கு மகளாக பிறந்தேன். அப்போது ஜெயலலிதாவுக்கு அவரது அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார். ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதா என்பவரும், அவரது தாய்வழி உறவினரான ரஞ்சனா ரவீந்திரநாத் என்பவரும் அந்த நேரத்தில் ஜெயலலிதாவை கவனித்துக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் தெரியும்.
குடும்ப கவுரவத்தைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததை வெளியில் கூறுவதில்லை என ஜெயலட்சுமி, லலிதா, ரஞ்சனா ஆகியோர் சத்தியம் செய்திருந்தனர். ஜெயலலிதாவின் சகோதரியான ஷைலஜாவும் அவரது கணவர் சாரதியும் தம்மை தத்துப் பிள்ளையாக வளர்த்தனர். முதன் முதலில் ஜெயலலிதாவை 1996ஆம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் சந்தித்தேன். ஜெயலலிதா என்மீது அளவு கடந்த அன்பு செலுத்தினார். 1996 முதல் 2016ஆம் ஆண்டு வரை பலமுறை அவருடன் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஜெயலலிதா பெங்களூரு வரும்போதெல்லாம் என்னைச் சந்திப்பார். ஜெயலலிதாவின் அதிகாரப்பூர்வ விருந்தினர் பட்டியலை சோதித்தால் அவர் சந்தித்தை உறுதி செய்யலாம்.
ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்படியே மஞ்சுளா என்ற எனது பெயரை வைஷ்ணவ பிராமண பெயரான அம்ருதா என மாற்றிக்கொண்டேன். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகே, தாம் ஜெயலலிதா பெற்றெடுத்த மகள் என தமக்கு லலிதா தெரிவித்தார். இது தொடர்பாக சிபிஐ இயக்குநர், குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அம்ருதா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
தான் ஜெயலலிதாவின் மகள்தான் என நிரூபிக்க அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி மதன் பி லோக்கூர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அம்ருதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டார். சசிகலா தரப்பினர் அம்ருதா ஜெயலலிதாவை அணுக முடியாமல் தடுத்து வந்ததாகவும், அவருக்கு தொடர்ந்து அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறினார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கர்நாடகா உயர்நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரருக்கு அனுமதியளித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.