திருநேல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறுசிறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் விசாரணைக்காக அழைப்படும்போது, அவர்களின் பற்களைப் பிடுங்கி உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் கொடுமைப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களும் சமூக ஊடகங்களில் பேட்டி அளித்தனர். இதனால், இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாய் வெடித்தது. இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்ட மற்ற காவல் துறையைச் சேர்ந்தர்களுக்கு பணியிடம் மாற்றப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்துவதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதாவை நியமித்துள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பலர் முகத்தைத் திறந்தபடி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தும், பல்வீர் சிங் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாததற்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து புதிய தலைமுறை சார்பில் வழக்கறிஞர் தமிழ்மணியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இது, அரசாங்க தரப்பு வழக்கறிஞரிடம் கேட்க வேண்டிய நியாயமான கேள்வி. பல காவல் துறை அதிகாரிகள் இதுபோன்ற, இதற்கும் மேலான குற்றங்களை, மனித உரிமை மீறல்களை நாள்தோறும் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுதும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை, அந்தந்த மாநில அரசுகள் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், அரசியல்வாதிகள் செய்கிற இதுபோன்று குற்றங்களுக்கு, ஊழல்களுக்கு காவல் துறை உடந்தையாகவும், உதவியாகவும் இருப்பதுதான். காவல் துறையினரைத் தண்டிக்க ஆரம்பித்தால், அவர்கள் அரசியல்வாதிகளைக் காட்டிக் கொடுத்துவிடுவர் என்கிற அச்சம்தான்.
இதில் முதல்வர் தலையிட்டு உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாவிட்டால், காவல் துறையால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும்.தமிழ்மணி, வழக்கறிஞர்
சமூக ஊடகங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முகத்தைத் திறந்துகொண்டு பேட்டி கொடுத்தவர்கள்கூட, அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணையின்போது ஆஜராகவில்லை. ஆக, அரசும் காவல் துறையும் ஏனைய துறைகளும் அவர்களை வரவிடாமல் தடுக்கின்றன. இது, அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு, குற்றங்களுக்கு காவல் துறை துணை போவதைக் காட்டுகிறது. காவல் துறை சட்டமீறல்களுக்கு, அரசியல்வாதிகள் உதவுகிறார்கள். இதை, ஒரு குழுவாக வைத்து சீரழிக்கிறார்கள். இதில் முதல்வர் தலையிட்டு உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யாவிட்டால், காவல் துறையால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக அரசுக்கு கெட்டபெயர் ஏற்படும்” என்றார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியான ராஜாராம், “ஏற்கெனவே சேரன்மாதேவி உதவி கலெக்டர்மூலம் பல்வீர் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரும், இவரும் ஒரே பேட்ஜைச் சேர்ந்தவர்கள் என்று புகார் வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே அமுதா ஐ.ஏ.எஸ். வந்துள்ளார். அவருடைய விசாரணையின்போது நிறைய தகவல்கள் கிடைக்கலாம். அதைவைத்து, பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தற்போதும் இதுபோன்ற புகார்கள் வருவதால், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பல்வீர் சிங் இருந்ததைத் தொடர்ந்து, அவரது கண்ட்ரோலில் இருந்த காவல் நிலையங்களிலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்ராஜாராம், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி
இந்த காரணத்தால்தான் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாமல் தயக்கம் காட்டப்படுகிறது. இதுவரை ஆர்.டி.ஓ. ரிப்போர்ட் கொடுக்கவில்லை. அந்த ரிப்போர்ட்டின்படி, அடுத்து நடவடிக்கை எடுப்பர். தற்போதும் இதுபோன்ற புகார்கள் வருவதால், அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பியாக பல்வீர் சிங் இருந்ததைத் தொடர்ந்து, அவரது கண்ட்ரோலில் இருந்த காவல் நிலையங்களிலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி ஆகிய காவல் நிலையங்களில் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் எழுந்த நிலையில், தற்போது பாப்பாக்குடி காவல் நிலையத்திலும் இதுபோன்று சம்பவம் நிகழ்ந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.