மக்களுக்காக நான்.. மக்களால் நான் என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களின் ஒரு பகுதியை ஏன் ஏழைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சுமார் 1000 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக்கோரி அதிமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக விளக்கமளிக்க தீபா மற்றும் தீபக் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
விசாரணையின் போது, ‘மக்களால் நான்; மக்களுக்காகவே நான்’ என்று கூறிய ஜெயலலிதாவின் சொத்துகளில் சிலவற்றை ஏன் ஏழைகளுக்கு வழங்க கூடாது என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.
எழுப்பினார். இதற்கு தீபா தரப்பில், “ஏழைகளின் நலனுக்காக ஜெயலலிதா'வின் சொத்துகள் சில பகுதிகளை பயன்படுத்துவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. போயஸ் கார்டன் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். என்னை அனுமதிக்காதனாலேயே ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போயஸ் கார்டன்'னில் இருவரையும் அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அத்துடன் ஜெயலலிதா இறந்த உடனேயே சொத்துக்களுக்கு உரிமைக்கோரி ஏன் நீதிமன்றத்தை அணுகவில்லை என நீதிபதிகள் கேள்வி
எழுப்பினர்.