ஆளுநர் ரவி பட்டமளிப்பு விழா
ஆளுநர் ரவி பட்டமளிப்பு விழா twitter pages
தமிழ்நாடு

படிப்பு முடிந்தும் பட்டம் கிடைக்காமல் அவதிப்படும் கல்லூரி மாணவர்கள்; ஏன் இந்த அவலநிலை? ஓர் அலசல்

PT WEB

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளில் பட்டம் அளிக்கப்படாததால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுதொடர்பாக, புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில், கோவையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும் பட்டம் அளிக்காதது தெரியவந்தது.

படித்தும் பட்டம் வழங்கப்படாததால் வேலை, மேல்படிப்புக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் அலுவலகத்தில் தேதி ஒதுக்காததால் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மோகன், ”திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 130க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கிவருகின்றன. இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இறுதியாண்டு முடிக்கும்போது, பட்ட சான்றிதழ் மற்றும் பட்டமளிப்பு விழாவில் அளிக்கப்படும் அங்கிக்கான கட்டணம் பெறப்படுகிறது.

இவ்வாறாக பாரதிதாசன் பல்கலைகழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 38ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான கட்டணம் கடந்த ஆண்டு மே மாதம் 13ஆம் தேதிக்குள் பெறப்பட்ட நிலையில், பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. மீண்டும் டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால் பட்டப்படிப்பை முடித்த சுமார் 2 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நெடுஞ்செழியன், மாணவர் நலனில் அக்கறை இல்லாமல் பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். அவர், “வெளிநாடு சென்று மேற்படிப்பு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு , PROVISIONAL CERTIFICATE வழங்கப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை” எனக் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து பல்கலைகழக துணைவேந்தர் செல்வத்திடம் கேட்டபோது, பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். கொரோனா தாக்கம் காரணமாக தேர்வுகளை மீண்டும் மீண்டும் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதே பட்டமளிப்பு விழாவினை நடத்துவதில் உருவான சிக்கலுக்கு காரணம் என்றார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதுகுறித்த செய்தி புதிய தலைமுறையில் வெளியானவுடன், பட்டமளிப்பு விழா நடைபெறாத ஏழு பல்கலைக்கழகங்களில் நான்குக்கான பட்டமளிப்புத் தேதியை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு ஜூன் 16ஆம் தேதியும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு ஜூன் 19ஆம் தேதியும், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ஜூன் 28ஆம் தேதியும், ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஜூலை 7ஆம் தேதியும் பட்டமளிப்பு விழாநடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், “பட்டமளிப்பு விழா தாமதத்துக்கு ஆளுநரே காரணம்” என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ”பட்டமளிப்பு விழாவுக்கு மத்திய அமைச்சர்களை அழைத்துவர வேண்டும்; வடஇந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்களை அழைக்க ஆளுநர் விரும்புவதாலேயே பட்டமளிப்பு விழா தாமதம் ஆகிறது. ஆளுநரின் தலையீட்டால் பட்டமளிப்பு விழாவை நடத்தமுடியவில்லை என துணைவேந்தர்கள் புகார் அளித்துள்ளனர். இதனால் 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் உள்ளனர்” எனப் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மாணவர்கள் பாதிக்கப்படுவதற்கு திமுக அரசே காரணம்; இந்த விஷயத்தில் அரசு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். என்றாலும் இதில் மாணவ மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, இதில் இருக்கும் சிக்கல்களை களைந்து, விரைந்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும் என்பதே ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.