தமிழ்நாடு

ஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஓபிஎஸ் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது?: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

Rasus

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவர் குடும்பத்தினர் மீதான திமுகவின் புகாரை ஏன் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‌மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டுமெனவும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மார்ச் 10-ஆம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு இன்று நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, புகாரை தலைமை செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் எமிலியாசும், புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கரும் தெரிவித்தனர்.

புகார் அளித்து மூன்று மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, தலைமை செயலாளர் பார்வைக்கு அனுப்பியவுடன் உங்கள் வேலை முடிந்ததா? அதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு தானே உள்ளது? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். சேகர் ரெட்டி டைரியில் ஓ. பன்னீர்செல்வம் பெயர் உள்ளதாக ‌மனுதாரர் தெரிவித்துள்ள நிலையில் ஏன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தப் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஜூலை 23-‌ ம் தேதி தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.