புரட்சியாளர் பகத்சிங் எழுதிய புத்தகத்தை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் பெரியார் வெளியிட்டார்.
நான் ஏன் நாத்திகன் ஆனேன்? (Why i am an atheist) என்பது பகத் சிங்கினால் லாகூர் சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு 1931 இல் எழுதியக் கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். பின்பு நூல் வடிவில் வெளியானது. பகத் சிங் தனது கடவுள் மறுப்பு நிலைப்பாட்டை விளக்கி இக்கட்டுரையை எழுதினார்.
பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற இந்தக் கட்டுரையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ப.ஜீவானந்தம் தமிழாக்கம் செய்தார். ப.ஜீவானந்தம் சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது, கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இந்தப் புத்தகம் வெளியானது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பெரியார். பெரியார் தனது உண்மை விளக்கம் அச்சகத்தின் மூலம், குடியரசு பதிப்பகத்தில் வெளியிட்டார்.
அதற்காக பெரியார் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் புத்தகத்திற்கு தடை விதித்ததோடு, பெரியாரையும், ஜீவாவையும் 1934ல் கைது செய்தது. தமிழக வரலாற்றில் மொழிபெயர்ப்பு செய்தமைக்காக முதன்முதலாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இதுதான் என்று கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் ராஜகுரு, சுகதேவ் ஆகியோருடன் பகத்சிங்கும் 1931, மார்ச் 23 இல்(இதே நாளில்) தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.